தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நீர் நிலைக் குழு உறுப்பினர், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ''தேசிய நீர்நிலை வரைபடம் மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதன்முறையாக சாட்டிலைட் மூலமாக நிலத்தடி நீர் கண்டறியப்பட உள்ளது. அதன்படி நிலத்தடி நீரை மக்கள் பயன்பாட்டிற்கு எவ்வாறு கொண்டு வருவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். இதற்காக வருகின்ற மார்ச் 9 ஆம் தேதியன்று இக்குழுவினர் ஆண்டிபட்டி வட்டாரப் பகுதி மக்களை நேரடியாகச் சென்று கருத்து கேட்க உள்ளனர். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு அரசியல் மற்றும் கட்சிகள் பாகுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது தவிர கடந்த அதிமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டில் ரூபாய் 250 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாற்றில் இருந்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கான அரசாணை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அந்தத் திட்டம் தற்போது உள்ள நிலவரத்துக்கு ஏற்ப மறுமதிப்பீடு செய்யப்பட உள்ளதாக வைகை வடிநில கோட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட மறுமதிப்பீடு முடிவடைந்ததும் அதற்கான பணிகளும் தொடங்கப்படும்''என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கலந்து கொள்ளவில்லை” என்றார். தொடர்ந்து 'இரட்டை இலை சின்னம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா' என்ற கேள்விக்கு, 'இது தொடர்பாக ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்' என்றார். ஓ.பி.எஸ் தனிக்கட்சி துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாவது குறித்த கேள்விக்கு, ‘ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்' என்றார். ஓ.பி.எஸ் கவர்னராகவும், இ.பி.எஸ் பாஜக மாநிலத் தலைவராகவும் வருவார் என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, 'தேர்தல் நேரத்தில் அரசியலுக்காக இது போல் ஏதாவது பேசுவார்கள்'' என்றார்.