மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அளவில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு வந்த துணை முதல்வரான ஓ.பி.எஸ்-ஐ தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதுபோல் திடீரென அரசியலில் குதித்த ஓ.பி.எஸ்-ன் மூத்த மகனான ரவீந்திரநாத்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 78 நாட்கள் இருந்தார். 38-வது நாள் நான் அங்குள்ள டாக்டர்களிடம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்வோம் என்று கூறினேன். அதற்கு டாக்டர்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? நாங்கள் கண்டிப்பாக காப்பாற்றுவோம் என்று கூறினர். அணிகள் பிரிந்த பிறகு தர்ம யுத்தம் ஆரம்பித்தேன்.
அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக பார்க்க சென்றேன். அப்போது அவர் என்னிடம் நான் சென்னை வந்திருந்த போது ஜெயலலிதா என்னை வீட்டில் சாப்பிடுவதற்கு கூப்பிட்டிருந்தார். நானும் சென்றிருந்தேன். அப்போது அவர் என்னிடம் நிறைய பேசினார். எனவே இந்த சூழ்நிலையில் கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் இணைய வேண்டும் என்று என்னிடம் சென்னார். வேறு பிரச்சினைகளை பற்றியெல்லாம் அவரிடம் பேசினேன். அவர் அணியை இணைக்குமாறு சொன்னார். நானும் சரி பிரச்சினையில்லை இணைந்து விடுகிறேன் என்றேன். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். கட்சி பதவியில் மட்டும் இருக்கிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும். அரசில் இருக்க வேண்டும் என்றார். அதனால்தான் இன்று நான் அமைச்சராக இருக்கிறேன். என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய சக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் பிரதமர் சொன்னதை சொல்லி நான் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்னேன். அவர்களும் நான் அமைச்சராக இருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தான் நான் இன்று அமைச்சராக இருக்கிறேன். மற்றபடி அமைச்சர் பதவியில் எனக்கு ஆசை இல்லை. 4 முறை அம்மா எனக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்தார். 2 முறை அம்மாவே என்னை முதல் அமைச்சராக அறிவித்தார். அந்த பெருமையே எனக்கு போதும்.
அம்மாவுக்கு சசிகலா கொடுத்த மன்னிப்பு கடிதத்தில், தன்னுடைய குடும்பத்தார்கள் அம்மாவுக்கு செய்த துரோகம் இப்போது தான் எனக்கு தெரியவந்தது. எனவே அவர்களோடு ஒட்டும் உறவும் வைக்க மாட்டேன் என்று எழுதி இருந்தார். அதன்பிறகு சசிகலாவை மட்டும் அம்மா போயஸ்கார்டன் உள்ளே அனுமதித்தார். வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அவர் உள்ளே வந்தபிறகு பிரச்சினை தீவிரமானது. அம்மா மூன்று நான்கு மாதத்தில் என்னை கூப்பிட்டார்.
பன்னீர்செல்வம் உட்காருங்கள். தினகரனுடன் ஏதும் பேசினீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். அந்த குடும்பத்தில் யாரிடமும் பேசக்கூடாது என்றார். நீங்கள் சொன்னால் நான் யாரிடமும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்றேன். நான் உயிரோடு இருக்கும் வரை தினகரனை என்வீட்டு வாசலில் நுழையவிடமாட்டேன் என்று சொன்னார். அம்மா எதற்காக அப்படி சொன்னார் என்று அவரிடம் நான் விளக்கம் கேட்க முடியாது. சரி அம்மா என்று கூறினேன். 6 மாதத்துக்கு ஒருமுறையாவது இந்த கேள்வியை என்னிடம் கேட்பார். தொடர்பில் இருக்கிறீகளா? பேசினீர்களா? என்பார். நீங்கள் சொன்ன பிறகு நான் எப்படி அம்மா பேசுவேன் என்பேன். நீங்கள் ஒருவர் மட்டும் தான் விசுவாசமாக இருக்கிறீர்கள். அதனால் தான் உங்களிடம் சொன்னேன் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டேன் என்று அம்மா சொன்னார்.
அம்மாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால் மட்டும் சசிகலா குடும்பம் என்னை துரோகி என்று கூறியது. 2016 தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று ஒரே போராட்டம். அதையெல்லாம் மீறி அம்மா எனக்கு சீட் கொடுத்தார்.
என்னை தோற்கடிப்பதற்கு தினகரன் 10 பேரை வரவழைத்து வேலை பார்த்தார். இதை நான் வெளியில் சொல்லவில்லை. யார் மீதும் பழியும் போடவில்லை. தினகரன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, எனது முதல் வேலை பன்னீர்செல்வத்தை மறுபடியும் டீக்கடையில் உட்கார வைப்பதுதான் என்றார். அவர் அ.தி.மு.கவை கைப்பற்ற நினைத்தார். அது முடியாமல் போனது. அந்த வெறுப்பு பொறாமையில் அப்படி பேசினார். என்னை டீக்கடையில் உட்கார வையுங்கள் பார்ப்போம். டீக்கடையில் நான் உங்களைப் போல் மோசம் செய்து மொள்ள மாரித்தனம் செய்து சம்பாதிக்கவில்லை. ஏற்கனவே சசிகலா சொன்னதை இப்போது தினகரன் சொல்கிறார். சசிகலா எல்லோரையும் உட்கார வைத்து சொல்லும்போது பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் நிச்சயமாக தோற்பார். அவர் வீட்டுக்கு போகும் போது உடுத்திய வேட்டி-சட்டையுடன் தான் போக வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்று சசிகலா கூறினார். இன்னும் நிறைய இருக்கிறது. நான் 1 சதவீதம்தான் கூறியுள்ளேன். 99 சதவீதம் கொஞ்சம் கொஞ்சமாக வரும். இந்த மாதிரி கோபம் வரும்போது வரும். நான் சொல்ல மாட்டேன் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
தினரகன் என்னை வளர்த்துவிட்டார் என்று கூறுவது பொய். 1980ம் ஆண்டு முதல் பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக அ.தி.மு.க.வில் இருந்தேன். அதன்பின்னர் இளைஞர் அணி செயலாளர், நகர செயலாளராக பதவி உயர்வு பெற்றேன். 1997ல் நகராட்சி செயலாளர் ஆனேன். அதன்பிறகுதான் தினகரன் கட்சியில் சேர்ந்தார். பெரியகுளம் தொகுதியில் 1999 லோக்சபா தேர்தலில் தினகரன் வெற்றிக்காக உழைத்தேன். ஆனால் அதற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை. அம்மாவுக்கு பெங்களுர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. அம்மா கோர்ட்டில் இருந்து 12 மணிக்கு வந்து என்னிடம் பேசினார். 1 மணி நேரம் கழித்து என்ன தண்டனை என்று கூறுகிறேன் என்றார். அம்மா உள்ளே சென்றதும் அவரது பாகதுகாப்பு படையினர் வெளியே வந்தனர். அம்மா உங்களை கூப்பிடுகிறார் என்றனர். நான் அவரை போய் பார்த்து என்ன என்றேன். என்னை குற்றவாளி என்று கூறிவிட்டனர். நீங்கள் உடனே சென்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுத்து முதல் அமைச்சராக ஆக வேண்டும் என்றார். யார் முதல் அமைச்சர் என்று முடிவு செய்யவில்லை என்றார். அதன்பிறகு அமைச்சர் விஸ்வநாதனை வரச்சொல்லி என்னிடம் சொன்னதை அவரிடம் சொன்னார். ஆனால் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. நானும் அவரும் ரொம்ப வருத்தப்பட்டோம். வருத்தப்படாதீர்கள். அழாதீர்கள் நன்றாக செயலாற்றுங்கள் என்றார். அதன்பிறகு அடுத்த வினாடியே பன்னீர்செல்வம் தான் முதல் அமைச்சர் என்றார்.
நம்மை கேட்காமல் அம்மா சொல்லி விட்டார்களே என்று சசிகலாவுக்கு முகம் வாடியது. அதன்பிறகு முதல்வராக பதவி ஏற்றேன். பின்னர் 2016 தீர்ப்புக்கு பிறகு எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அளவே கிடையாது. என்னிடத்தில் வேறு யாருக்காவது இது போல் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள். கட்சியே வேண்டாம் என்று போய் இருப்பார்கள். அவ்வளவு நெருக்கடி. இதையெல்லாம் நான் தாங்கி நின்றேன் என்றால் புரட்சித் தலைவி அம்மாவுக்காக மட்டும் தான் நான் தாங்கிக் கொண்டேன் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ்.-ன் மூத்த மகனான ரவீந்திரநாத் பேசும்போது... ஜெ. உயிருடன் இருக்கும்போது இவர்களுக்கு இருந்த பயம் இப்போது இல்லை. தேனி மாவட்டத்தில் அப்படி ஒருவர் இருக்கிறார் அவர்பெயர்தான் தங்கத்தமிழ்ச்செல்வன். அவர் முன்னால் ஒரு மைக் இருந்தாலே போதும் உலறிவிடுவார். இப்போது 10 மைக் அவர் முன் வந்துவிட்டது. அப்போது எப்படி உலறுவார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவரது உலர்களை தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை எம்.பி. பதவிக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் நிற்க வைக்கப்பட்ட போது தோற்றுவிடுகிறார். தான் தோற்றதற்கு டிடிவி தான் முதல் காரணம் என்று ஜெ.விடம் சொன்னவர் தான் இதே தங்கத்தமிழ்ச்செல்வன் தான். ஆர்.கே. நகர் சட்டமன்ற தேர்தலுக்காக சுயநலத்திற்காக வீடியோ வெளியிட்டார்கள். அவர்களை விசாரணை ஆணையத்தில் இருக்கும் ஆறுமுகசாமி காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் சேர்மனுமான முருக்கோடை ராமர், முன்னாள் எம்.பி. சையதுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.