தமிழகம் ஆண்டாள் மண் என்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கருத்து குறித்த கேள்விக்கு, இது தமிழ் மண் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, மின்சார துறை தொழிலாளர்களுடான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது எனவும், இப்பிரச்சனையில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டச்சபையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகர் தனபால் திறந்து வைத்ததில் பெருமையடைவதாகவும், ஜெயலலிதாவின் படத்தை யார் திறந்தாலும் தவறில்லை எனவும் அவர் கூறினார். மேலும் இவ்விவகாரத்தில் டிடிவி தினகரன், அரசியல் காரணங்களுக்காக தேசிய தலைவர்களை அழைக்கவில்லை எனக்கூறுவதாகவும், பாஜக தலைவர்களை அழைத்திருந்தால் தமிழக அரசு பாஜகவின் அடிமையாகி விட்டது எனக்கூறியிருப்பார் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொருத்தவரை இந்தியா முழுவதும் மெத்தனமாக சென்று கொண்டிருக்கிறது எனவும், மத்திய அரசு இணைந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகமாக செயல்படுத்துவோம் எனவும் கூறினார்.
தேனி மாவட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் அமைச்சராக வேண்டுமென நாங்கள் ஆசைப்பட்டோம் எனவும், டிடிவி தினகரன் பின்னால் சென்ற அவர் எங்களை பற்றி பேச தகுதியில்லை எனவும் தெரிவித்தார். டிடிவி தினகரன் செல்லும் எல்லா இடங்களிலும் பேக்கஸ் முறையில் பணம் கொடுத்து ஆட்களை சேர்த்து கூட்டம் இருப்பது போல காட்டி வருவதாகவும்,ஆர்.கே.நகர் மக்களின் வறுமையை பயன்படுத்தி 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா முறையில் வெற்றி பெற்றார் எனவும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் சமூகத்திற்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தியாகத்தை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் படம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆண்டாள் மண் குறித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை கருத்து குறித்த கேள்விக்கு, இது தமிழ் மண் என பதிலளித்தார். மேலும் கருத்து சுதந்திரம் இருப்பதால் யாரும் எந்த கருத்தையும் சொல்வதற்கு தடை இல்லை என்றாலும், அக்கருத்துகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென கூறினார்.
டிடிவி தினகரனுக்கு கட்சியும் இல்லை, கொடியும் இல்லை, இலட்சியமும் இல்லை, தொண்டர்களும் இல்லை எனக்கூறிய அவர், டிடிவி தினகரன் தமிழக அரசு மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என தெரிவித்தார்.
- அருள்