நேற்று முன்தினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கால அவகாசம் வழங்கப்படவில்லை' என்ற கண்டனத்தையும் விஜயகாந்த் வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதற்கும் இடையே ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் இருப்பது எந்த விதத்தில் நியாயம். இதையெல்லாம் பார்க்கும்போது ஆளுங்கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்கியதைப் போன்று இந்த தேர்தலிலும் கால அவகாசம் வழங்கப்பட்டால்தான் அனைத்து வேட்பாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்'' என அவர் தெரிவித்துள்ளார்.