இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுவதுமாகப் படிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
முதல்வர் தீர்மானத்தை வாசிக்கும்போதே கூட்டத்தின் பாதியில் ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ட்விட்டரில் #getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தமிழகம் என்றோ தமிழ்நாடு என்றோ ஆளுநர் அழைக்கட்டும். அது பிரச்சனை இல்லை. ஆனால், தமிழ்நாடு லச்சினையைப் புறக்கணித்தார் என்றால், ஆளுநர் வேண்டுமென்றே செயல்படுகிறார். இது வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கக் கூடிய ஒரு செயலாகத் தெரிகிறது. இதனை வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே பின்பற்றக் கூடிய நெறிமுறைகளை ஆளுநர் புறக்கணிக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணிக்கிறார். திராவிட அரசியலை விமர்சிக்கிறார் என்றால் அவர் இங்கு ஆளுநராக இருப்பதற்குத் தகுதியற்றவர். அவரை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுகின்ற வரையில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து போராடும்.
ஆளுநர் பிரச்சனையை முன்னிறுத்தி 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதை முடித்தவுடன் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி வேங்கைவயைல் பிரச்சனைக்காக; அந்த அநாகரிகத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும்” எனக் கூறினார்.