சிறுமி #ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை:
ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்!
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.@CMOTamilNadu pic.twitter.com/L3uAqMYWtA
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 11, 2020
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சிறு மதுரை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்துக் கடைக்கு ஓடி பார்த்திருக்கிறார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்து கதறிய பெற்றோர், உடனடியாகத் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலத்தில், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை. ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். சிறுமி ஜெயஸ்ரீயைப் படுகொலைசெய்த கொடியவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய்விடக் கூடாது. உடனே விசாரித்து விரைந்து தண்டிக்கவேண்டும். குற்றவாளிகள் ஆளுங்கட்சி என்பதால் அவர்களைக் காப்பாற்ற ஆளுங்கட்சித் தரப்பில் தலையிட்டால் அதிகாரிகள் இணங்கி விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் அரசுக்கு ஏன் இந்தச் சிரமம்? கரோனா நெருக்கடியிலிருந்து அரசு மீண்டபிறகு ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லலாம். முடிந்தால் அப்போது நிதியுதவி செய்யலாம் என்றும் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை நாடு, மொழி, இனம், மதம், சாதி போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்து காலம் காலமாக நடந்தேறும் ஒரு 'உலகளாவியக் கொடூரம்'. அது ஆண்கள் என்னும் உளவியல் கட்டமைத்துள்ள ஆதிக்கவெறியின் வெளிப்பாடாகும். இது மானுடத்தின் பேரிழிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.