
தமிழக பாஜகவில் 4 பொதுச் செயலாளர்கள், 5 துணைத் தலைவர்கள், 10 செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பொதுச் செயலாளர்களை மாற்றியமைப்பதில் வேகம் காட்டுகிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதில் கரு. நாகராஜனை மாற்றியாக வேண்டும் என்கிற குரல்கள் கமலாலயத்தில் எதிரொலிக்கின்றன.
பாஜகவின் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எம்.என். ராஜா, சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் கரு. நாகராஜன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அதிருப்திகள் பற்றி விசாரித்தபோது, “தமிழக பாஜகவில் கரு. நாகராஜன், கே.டி. ராகவன், கோவை செல்வக்குமார், மதுரை சீனிவாசன் என 4 பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இதில், தன் மீதான வீடியோ குற்றச்சாட்டுகளால் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார் ராகவன்.
பாஜகவின் வளர்ச்சிக்காக தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து 4 பொதுச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொடுத்தது கட்சித் தலைமை. இதில் சென்னை மண்டலத்துக்குப் பொறுப்பாளர் கரு. நாகராஜன். பொறுப்பு கொடுக்கப்பட்டும் கட்சியின் வளர்ச்சிக்காக எதையும் அவர் செய்யவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன நடிகை குஷ்பு, கரு. நாகராஜனுக்கு எதிராக புகார் வாசித்திருக்கிறார். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, களநிலவரத்தையறிந்து அதனைப் புறக்கணிக்க மூத்த தலைவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், பாஜகவை போட்டியிட வலியுறுத்தி, வேட்பாளராக களமிறங்கினார் கரு. நாகராஜன். ஆனால், நோட்டாவைக் கூட அவரால் தாண்ட முடியவில்லை.
அதேபோல நடிகர் சரத்குமாரின் ச.ம.க. கட்சியில் இவர் இருந்தபோது திருமங்கலம் இடைத்தேர்தலில் சரத்குமாரிடம் மல்லுக்கட்டி ச.ம.க.வை போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில் ச.ம.க.வுக்கு கிடைத்த வாக்குகள் 850. அதிலிருந்தே சரத்தின் அரசியல் செல்வாக்கும் சரிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தி அன்று சென்னையிலுள்ள தேவர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தார் சென்னை மண்டலப் பொறுப்பாளரான கரு. நாகராஜன். ஊர்வலத்தில் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர்.
இதனால், மூத்த தலைவர்களும் சென்னை மண்டல நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தவிர, அவரின் தேர்தல் வியூகமும் சரியில்லை. வேலையும் முறையாக செய்யாத இவரை வைத்துக்கொண்டு மாநகராட்சித் தேர்தலை எப்படி பாஜக சந்திக்க முடியும்? அதனால்தான் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது'' என்கிறார்கள்.