2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.