அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து பேசி வந்தார்.
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தனது கருத்துகளை முன்வைத்து இருந்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இது குறித்து தொல். திருமாவளவன் எம்.பி தனது ட்விட்டரில், “பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 23-06-2023 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் சனாதன பாஜகவை வீழ்த்துவதற்கான ஆலோசனைகள் வழங்கித் தமிழ்நாடு திரும்பியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விசிக சார்பில் எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.