
கோவில்பட்டி அருகே முக்கூட்டுமலையில் ஸ்ரீ முத்து வீரப்பசுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு விழா கமிட்டியினர் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்த நிலையில், கழுகுமலை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் மாரியம்மாள், தலைமை காவலர் சேதுராஜன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தனர்.
கரகாட்டம் நிகழ்ச்சி, 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போது அங்கிருந்த பிளாஸ்டிக் சேரில் போலீசார் அமர்ந்திருந்தனர். களை கட்டிய கரகாட்டத்தை ஆரவாரத்துடன் மக்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கரகாட்டம் நடைபெற்று கொண்டிருந்த பகுதியை ஒரு ரவுண்டு சுற்றி வந்த போலீசார் ஏற்கனவே தாங்கள் உட்கார்ந்திருந்த பிளாஸ்டிக் சேர் அருகே வந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த சிப்பிப்பாறை வடக்கு தெருவை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காவலராக பணியாற்றும் பாண்டியராஜ்(33) என்பவர், பெண் காவலர் மாரியம்மாள், தலைமை காவலர் சேதுராஜன் ஆகிய இருவரிடமும், “இந்த சேர் சும்மா தானே கிடக்கு. நீங்க சேரில் உட்காருங்க இல்லைன்னா நான் உட்காருவேன்னு” வம்பிழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, தம்பி.. நீ மக்களுடன் போய் உக்காருன்னு காவலர்கள் சொல்லியுள்ளனர். அதற்கு பாண்டியராஜ், “நீயும் போலீஸு, நானும் போலீஸு..” என ஒருமையில் பேசி சேரில் உட்காட்ந்துள்ளார். இதற்கு பெண் காவலர் மாரியம்மாள் கடுமையாக எச்சரிக்கவே, அவரிடமிருந்து சேரை பிடுங்கி, “நீ என்ன பெரிய ஐபிஎஸ் ஆபிஸரா? இல்லை ஐஸ்வர்யா ராயா ?என கேட்டு மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தெரிவித்ததை தொடர்ந்து நைட் ரவுண்ட்ஸ்சில் இருந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்.ஐ. சுந்தர் உள்ளிட்ட போலீசார் கரகாட்டம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று போதையில் அலப்பறை கொடுத்த பி.எஸ்.எப். வீரர் பாண்டியராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்திய போது, “எனக்கு புரோட்டா வாங்கி கொடுங்க.... விவரமா எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட சொல்றேன்” என்று போதையில் உளறியுள்ளார்.
கழுகுமலையில் நள்ளிரவில் டீக்கடை கூட இல்லாததால் அமைதி காத்த போலீசார் காலையில் போதை தெளிந்ததும் டீயும் வடையும் வாங்கி கொடுத்து விசாரித்தபோது, “நேற்று நைட்டு நடந்ததை சொல்லவே கேவலமா இருக்கு மேடம். சமாதானமா போயிருவோம்” என்று தெளிவாக பேசியிருக்கிறார். ஆனால் கராறாக இருந்த போலீஸ் தரப்பு கரகாட்டம் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் போலீசாரை தரைகுறைவாக பேசி அலப்பறை கொடுத்த பாண்டியராஜ் மீது பொது இடத்தில் அமைதியை சீர்குலைத்தல், ஆபாசமான செயல்களை செய்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதலில் ஈடுபடுதல், மது போதையில் அச்சுறுத்தியது என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி