சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த 22 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றபோது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர், மஸ்தானின் உறவினரான சித்தா டாக்டர் சுல்தான், அவரது நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஐந்து பேரும் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் கடந்த 22ஆம் தேதி மஸ்தான் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஊரப்பாக்கம் அருகே அவரது டிரைவரின் உதவியுடன் கொலை செய்துள்ளனர். இதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக அவரது டிரைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்ய திட்டமிட்ட அவரது கார் டிரைவர், மூச்சுத்திணறலால் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் நசீர், மஸ்தானின் கைகளை பின்புறமாக இறுக்கிப் பிடித்துக்கொள்ள உடன் இருந்தவர்கள் மஸ்தானின் வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்துக் கொலை செய்துள்ளதும் பின்னர் தெரிய வந்தது. மஸ்தானின் உறவினர் இம்ரான் பாஷா குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “நான் மஸ்தானின் உறவினர் என்பதால் அவரிடம் நெருங்கிப் பழகி வந்தேன். அவ்வப்போது கடன் வாங்கி 15 லட்சம் வரை கடன் வாங்கி விட்டேன். அவரது மகனுக்கு திருமணம் நடப்பதால் கொடுத்த கடனை திருப்பி கேட்டார். உறவினர்கள் முன்பு என்னை மஸ்தான் திட்டினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
மஸ்தான் மருத்துவர் என்பதால் அவரை ஆயுதங்களால் கொல்ல முடியாது. எனவே மூச்சு திணற வைத்து கொலை செய்தோம்” எனக் கூறியுள்ளார். குற்றவாளிகள் ஐந்து பேரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.