மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து புதுச்சேரியிலும், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை ஆதரித்து கடலூர் மாவட்டத்திலும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;
பாசிச போக்குடன் ஜனநாயகத்தை நடத்தி வருகின்றது மோடி அரசு. இந்திய நாட்டில் ஜனநாயகம் நீடிக்குமா? அல்லது பாசிசம் நீடிக்குமா என்ற கேள்வி தற்போதைய மக்களவை தேர்தலில் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மூலம் மூன்று பேரை துணைநிலை ஆளுநர் நியமித்ததை மக்கள் அனைவரும் அறிவர். மாநில அந்தஸ்து இல்லாததால் 25% நிதி மட்டுமே அளிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்றார். ஆனால், 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. அதேபோல் அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.10 ஆயிரத்து 361 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு கம்பெனிகள் வந்தபோது கமிஷன் கேட்டதால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஆக வேலையில்லா திண்டாட்டத்துக்கு இந்த அரசு ஒரு காரணம்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாழாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் குடிநீர் இல்லாமல் போகும், வீராணம் ஏரி வறண்டுபோய்விடும். மனிதநேயமும் சகோதரத்துவமும் தழைக்க நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.