‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற தலைப்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை மனுவாக வாங்கி ஆட்சிக்கு வந்த அடுத்த 100 நாட்களில் அதனைத் தீர்க்க முடிவு செய்யும் திட்டத்தின்படி, ஜனவரி 29ஆம் தேதி திருவண்ணாமலை நகரில் இருந்து பிரச்சாரப் பயணத்தை துவங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களை திருவண்ணாமலைக்கு வரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை வாங்கி அதற்கு சீரியல் எண் தந்து, அந்த மனுக்களை மேடையில் இருந்த பெட்டிகளில் சேமித்துவைத்தனர்.
இந்த மனுக்கள் வாங்குவதற்கு பள்ளி ஆசிரியர்களை ஏற்பாடு செய்து அவர்களை டேபிள் போட்டு அமரவைத்து மனுக்களைப் பெற்றனர்.
சரியாக 10.35க்கு மேடையேறிய ஸ்டாலின், அந்த மனுக்களில் இருந்து சுமார் 20 மனுக்களை எடுத்து அந்த மனுதாரர்களைப் பேசவைத்தார். அவர்களும் மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கையினை வாசித்தனர். அவர்களுக்குப் பதில் தந்தார் ஸ்டாலின்.
அதன்பின்னர் நிறைவுரையாற்றிய ஸ்டாலின், “நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் புகார்களை தீர்க்க தனியாக ஒருதுறை ஏற்படுத்தப்படும். அந்தத் துறை வாயிலாக இந்த கோரிக்கை மனுக்கள் துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தத் துறை வாரியாக பொதுமக்கள் தந்துள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே, மனுவுக்குப் பதிவு எண் தருகிறோம். ‘உங்களுக்காகவே நான், உங்களில் நான்’ நீங்கள் உங்கள் பிரச்சனைகனை என் முதுகில் ஏற்றி வைத்துள்ளீர்கள். உங்கள் பிரச்சனைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன்” என வாக்குறுதி வழங்கினார்.
ஆயிரத்துக்கும் அதிகமான புகார் மனுக்கள் அடங்கிய பெட்டியைப் பூட்டுப் போட்டு அந்தச் சாவியை தன்னிடம் வைத்துகொண்டார். மேலும் வேறு யாரும் அதனைப் பிரிக்காத வகையில் அரக்கு வைத்து சீல் வைத்தார். அந்தப் புகார்கள் அடங்கிய பெட்டி அறிவாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஸ்டாலினை சந்தித்து மனுதர வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் மேடைக்கு அருகே தனியே பந்தல் அமைத்து உணவுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள ஹோட்டலுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டுதவற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர் மாவட்ட திமுக சார்பில்.
மாலை 5 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரில் ஆரணி, போளுர், செய்யார், வந்தவாசி தொகுதி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார் ஸ்டாலின்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்