தனது தலைமையிலான மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்திருக்கிறார் பிரதம் மோடி. இதில் 30-க்கும் மேற்பட்ட புது முகங்களுடன் 43 பேர் அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு அதிக முக்கியத்துவமும் இந்த அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், இதற்கு முன்பு இணையமைச்சர்களாக இருந்த 7 பேரை கேபினெட் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி. சீனியர் அமைச்சர்களாக இருந்த பலரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் அவர்களின் பெர்ஃபாமன்ஸ் தோல்வியடைந்து விட்டதாலும் திறமையின் அடிப்படையிலும் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மேலிடத்தில் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், மோடியைத்தான் முதலில் மாற்றியிருக்க வேண்டும் என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங்சுர்ஜித்வாலே, “திறமையின் அடிப்படையில்தான் மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது என்றால், முதலில் மோடியைத்தான் மாற்றியிருக்க வேண்டும். நிர்வாக ரீதியாக மோடிதான் தோல்வியடைந்திருக்கிறார். நிர்வாக தோல்விகளுக்காக அவரைத் தான் நீக்கியிருக்க வேண்டும். மோடி மட்டுமல்ல, அமீத்சா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் நீக்கியிருக்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார் சுர்ஜித்வாலே.
இதற்கிடையே, மோடியின் அமைச்சரவையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சராக்கப்படுவதும் கூடுதலாகியிருக்கிறது. ஏற்கனவே அமைச்சரவையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெய்சங்கர், ஹர்திசிங்பூரி வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், அஸ்வினி வைஷவ், ராம்சந்திரபிரசாத்சிங் ஆகியோர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இவர்களும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான். அதிகாரிகளின் ராஜ்ஜியங்களாக மாறி வருகிறது மோடியின் அமைச்சரவை.