கழுத்தில் ஆளுயர மாலையோடு, விருதுநகர் வீதிகளில் கம்பீரமாக நடந்து வருகிறார், அ.தி.மு.க பிரமுகரான ‘கோகுலம்’ தங்கராஜ். மலர்த் தட்டுகளைக் கையில் வைத்திருக்கும் பெண்கள், அவர் மீது தொடர்ந்து மலர் தூவி வரவேற்கின்றனர். பின்னணியில், எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனியில் இடம்பெற்ற ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற..’ பாடல் ஒலிக்கிறது.
கோகுலம் தங்கராஜுவின் இந்த வீதியுலா எதற்காகவாம்? நலிந்தோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட தொகுப்புகளை வழங்க வரும்போதுதான், இத்தனை தடபுடல் வரவேற்பு!
இது போதாதா? ரத்தத்தின் ரத்தங்கள் சிலர் சூடாகிவிட்டனர். “வரும் தேர்தலில் விருதுநகர் தொகுதியின் அ.தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் நானே என்ற மிதப்பில், வள்ளல் முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் தங்கராஜ். இவரெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் நாடு தாங்காது..” எனப் புகார் வாசித்தனர்.
நாம் கோகுலம் தங்கராஜுவிடம் பேசினோம். “மக்களின் ஆர்வ மிகுதியால் இந்தத் தவறு நடந்துவிட்டது. எம்.ஜி.ஆர். எங்கே? நான் எங்கே? இதுபோன்ற வரவேற்பினை, முதல்வருக்கோ, துணை முதல்வருக்கோ அளிப்பதே சரி. இந்தக் கரோனா காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதுவரையில் தொகுதி முழுவதும், ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்து, 60,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறேன். நான் அப்படி ஒன்றும் வசதியானவன் கிடையாது. நகை, நட்டுகளை விற்றுத்தான், இதனைச் செய்துவருகிறேன்.” என்று அடக்கியே வாசித்தார்.
அ.தி.மு.க அனுதாபியான செல்வன், “நோயாளி ஒருவருக்கு வாழைப்பழத்தைக் கொடுத்துவிட்டு மூன்று பேர் போட்டோ எடுத்து வைரலானதெல்லாம் நம் நாட்டில் நடந்திருக்கிறது. மக்களுக்காக ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்ததாக கணக்கு வைத்திருக்கிறார், கோகுலம் தங்கராஜ். வாக்காளர்களைக் கவர்வதற்காக, தன்னை அவர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இது ஒன்றும் பெரிய குற்றமல்ல!” என்றார்.
ஆமாம்! இன்றைய அரசியலில்.. இதெல்லாம் சாதாரணமப்பா!