
சேப்பாக்கம் கொய்யாத்தோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யவுள்ள நிலையில், புதிய குடியிருப்பு கட்டும்வரை மக்கள் வெளியில் தங்குவதற்கான நிவாரணத் தொகையை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேற்று வழங்கினர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன் ''கொய்யாத்தோப்பில் மட்டும் 52 கொடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 348 வீடுகள், 46 குடியிருப்புகள் 18 மாதங்களில் கட்டிக்கொடுத்துவிடுகிறோம். நாம் செய்யக்கூடிய வேலைகளை பார்த்து அதிமுககாரர்கள் தவறான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். உங்களுக்கு வீடு தரமாட்டார்கள், உங்களை காலி செய்ய வைத்துவிட்டு வேறொருவருக்கு வீட்டை கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல முயற்சி செய்கிறார்கள். ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். கலைஞராக இருந்தாலும் அவரின் மறு உருவமாக இருக்கும் ஸ்டாலினாக இருந்தாலும் சொன்னதைத்தான் செய்வார்கள்.
ஏற்கனவே முதல்வர் சொல்லிவிட்டார் எங்கெல்லாம் வீடுகள் இடிக்கப்படுகிறதோ அவர்ளுக்கு அதே பகுதிகளில் வீடு வழங்கப்படும். நீங்கள் வீட்டை எவ்வளவு சீக்கிரம் காலிபண்ணி தருகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் வீட்டை கட்டித்தருவோம். 18 மாதம் என்று சொல்லியிருக்கிறோம். நீங்கள் மட்டும் ஒரு மாதத்தில் காலிசெய்து கொடுத்தால் 19 ஆவது மாதம் சட்டமன்ற உறுப்பினராக இல்ல, அமைச்சராக வந்து உதயநிதி வீடுகளை உங்களுக்கு கொடுப்பார்'' என்றார்.