தலைமறைவாக இருந்துவரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தேடிவரும் நிலையில் அவர் டெல்லி செல்வதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுத்த தர்மபுரியை சேர்ந்த பொன்னுவேல் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். இதனை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடியை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்துவருவதால், அவரை தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தற்போது தர்மபுரியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டுநரான ஆறுமுகம் மற்றும் அமைச்சரின் பினாமியான பொன்னுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை தர்மபுரியில் இருந்து பெங்களூர் அழைத்து சென்று டெல்லிக்கு ரயில் ஏற்றிவிட்டு வந்துள்ளனர்.
அந்த வீடியோ புட்டேஜை விருதுநகர் போலீசார் கைப்பற்றிய நிலையில் இன்று காலை தர்மபுரிக்கு விரைந்து சென்று பொன்னுவேல் மற்றும் ஆறுமுகம் இருவரையும் கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தர்மபுரி அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கவே காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.