சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பொழுது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர், மஸ்தானின் உறவினரான சித்தா டாக்டர் சுல்தான், மஸ்தானின் நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுல்தான் அகமது மஸ்தானின் சகோதரர் மகன் ஆவார்.
காவல்துறையின் விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஐந்து பேரும் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் கடந்த 22ஆம் தேதி மஸ்தான் தனது காரில் சென்று கொண்டிருந்த போது ஊரப்பாக்கம் அருகே அவரது டிரைவரின் உதவியுடன் கொலை செய்துள்ளனர்.
இதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக அவரது டிரைவர் கூறியுள்ளார். இதன் பின் விசாரணையில் 5 பேர் இணைந்து மஸ்தானை கொலை செய்துள்ளது தெரிய வந்தது.