அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறிவிடாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் கடந்த வாரம் முடிந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி. பட்ஜெட் விவாதங்களில் தி.மு.க. முன்வைத்த சிலபல விசயங்கள் குறித்த கமெண்ட் அங்கே எதிரொலித்திருக்கிறது.
குறிப்பாக, குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என சட்டமன்றத்தில் அண்ணன் எடப்பாடி எழுப்பிய கேள்விகளுக்கு மறுநாள் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நிறைய பாயிண்டுகளை தயாரித்து வந்தோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை நமக்கு ஸ்டாலின் கொடுக்கவே இல்லை'' என அமைச்சர்கள் சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார் எடப்பாடி.
துறை ரீதியிலான மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற மார்ச்-15 முதல் மீண்டும் சட்ட மன்றத்தை கூட்டுவது பற்றியும் விவாதித்தனர். இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை குறித்தும், ராஜ்யசபா தேர்தல் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது.
இது குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, ராஜ்யசபா தேர்தலில் 3 இடங்களை நம்மால் ஜெயிக்க முடியும். ஆனால், முந்தைய தேர்தலில் பா.ம.க.வுக்கு கொடுத்தது போல தற்போது ஒரு இடத்தை கேட்டு பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வும் நெருக்கடி கொடுக்கும். அதற்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. மூன்று இடங்களிலும் அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும். லோக்சபாவில் நமக்கு ஒரே ஒரு எம்.பி. இருக்கும் நிலையில் ராஜ்யசபாவில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தோழமைக் கட்சிகளுக்கு தாரை வார்த்தால் கட்சிக்குள் மனக்கசப்புகள் உருவாகும் என அமைச்சர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.
அப்போது, அ.தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க. விலகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் போன முறை பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கினோம். அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வலிமையாக உள்ள வட தமிழகத்தில் அதனை நாம் எதிர்கொள்ள நம் கூட்டணியில் பா.ம.க. இருப்பது அவசியம். சட்டமன்றத் தேர்தலின் போது நேரடி அரசியலில் ரஜினி இறங்கினால் அப்போது கூட்டணி கணக்குகள் தாறுமாறாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரஜினி பின்னால் பா.ம.க.வும் பா.ஜ.க.வும் போவதற்கும் வாய்ப்பு உண்டு. பா.ம.க. அப்படி ஒரு நிலையை எடுத்தால் வட தமிழகத்தில் நமக்கு சிக்கல்தான் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.
இதற்கிடையே, ரஜினியுடன் பா.ம.க. நட்பை வளர்த்து வருவதையறிந்து அவ்வப்போது டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்து வருகிறார் எடப்பாடி. அதேசமயம், அ.தி.மு.க.வை விட்டு பா.ம.க. விலகி ரஜினியை ஆதரித்து விடக்கூடாது என்பது மூத்த அமைச்சர்கள் இருவர் மூலம் ராமதாசிடம் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பா.ம.க.வின் கிச்சன் கேபினெட்டில் சட்டமன்றத் தேர்தல் பற்றி அடிக்கடி விவாதங்களும் நடக்கின்றன.
பா.ம.க.வின் உள்வட்டங்களிடம் பேசியபோது, சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற விட்டு விடக் கூடாது என டாக்டர் ராமதாசும் அன்புமணி ராமதாசும் அழுத்தமாக இருக்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அன்புமணியின் முதல்வர் கனவு நிறைவேறாது. அதாவது, 2026 தேர்தலில் அன்புமணியை முதல்வராக்க 2021 தேர்தலிருந்தே அதற்கான அரசியலைத் துவக்க வேண்டும் என்பது பா.ம.க.வின் அஜெண்டா! ஆனால், 2021-ல் ஸ்டாலின் முதல்வராகி விட்டால் அதன் பிறகு தி.மு.க. அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும்.
அதனால், தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல் 2021-ல் தடுத்துவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் அரசியல் ரீதியாக பலகீனமாகிவிடுவார் என டாக்டர் ராமதாசும் அன்புமணியும் கணக்குப் போட்டுள்ளனர். அதற்காக பா.ம.க.வின் அரசியல் நிலைப்பாடுகளை அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினி என்கிற மூன்று வட்டங்களை மையப்படுத்தியே அடிக்கடி ஆலோசிக்கிறார்கள். மத்தியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் சட்டமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.வையும் மனதில் வைத்தே கூட்டணி அமைப்பது. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை எனில் பா.ம.க.வை மட்டுமே முன்னிறுத்தி கூட்டணி பேசுவது என்கிற நிலைப்பாட்டுக்கும் வந்திருக்கிறார்கள்.
அந்த வகையில், ரஜினி கட்சி ஆரம்பிக்கிற நிலையில், அவருடன் கூட்டணி வைப்பது பா.ம.க.வுக்கு பலம் என திட்டமிடுகிறார் அன்புமணி. ஆனால், ராமதாசோ, அ.தி. மு.க.வா? ரஜினியா? என்கிற போது அ.தி.மு.க. கூட்டணி தான் சரியாக இருக்கும் என கருதுகிறார். காரணம், ரஜினி இன்னும் அரசியல் ரீதியாக தன்னை நிரூபிக்கவில்லை என்பதுதான். டாக்டரின் இந்த மனநிலையை அறிந்து, ரஜினியுடனான கூட்டணிதான் சரியாக இருக்கும் என தேவைப்படுகிற போதெல்லாம் அவரிடம் வலியுறுத்தி வருகிறது பா.ம.க. கிச்சன் கேபினெட்! பா.ம.க.வின் இப்படிப்பட்ட அரசியலை உள்வாங்கியிருப்பதால்தான் பா.ம.க.வை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள டாக்டரோடு அழுத்தமான தொடர்பில் இருக்கிறது அ.தி.மு.க. தலைமை! என விவரிக்கின்றனர்.