
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் அரசியலில் குதித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதுபோல் தற்போது மாநில அளவில் அரசியல் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருக்கக்கூடிய ஓ.பி.எஸ்-சின் மூத்த வாரிசான ரவீந்திரநாத்தும் அரசியலில் குதித்து வலம் வருகிறார்.
ஜெ., முதல்வராக இருந்த போது ஓ.பி.எஸ் மேல் அதிக மரியாதை வைத்து இருந்தார். அப்பொழுது தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத்துக்கு ஜெ., திருமணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் இளைஞர் இளம் பெண் பாசரையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்மூலம் அரசியலில் குதித்த ரவி மாவட்ட அளவில் பாசரையையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் தான் ஜெ.,விடம் தங்கதமிழ்ச்செல்வன் நெருக்கமாகி, மாவட்ட செயலாளர் பதவியை வாங்கியவுடனே ரவீந்திரநாத்திடம் இருந்த இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியை பறித்து தனது ஆதரவாளரான மணிக்கு தங்கதமிழ்ச்செல்வன் கொடுத்தார்.
இதனால் மனம் உடைந்த ரவி அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி வந்தார். அதன் பின் ஜெ.,மறைவுக்கு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போதும் ரவி வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தவர் தான் தற்பொழுது ஓபிஎஸ் துணை முதல்வரானவுடனே மீண்டும் அரசியலில் குதித்து விட்டார்.

கடந்த மூன்று நாட்களாக தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் முகாம் போட்டு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற வனத்துறை ஆய்வு, சமூகநலத்துறை. ஜல்லிக்கட்டு உள்பட அனைத்து அரசு விழாவிலும் ஓ.பி.எஸ் கூடவே ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டார்.
அதுபோல் தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விழா மேடையிலேயே உட்கார வைத்தார். ஒவ்வொரு விழா முடிந்த பின்பு எந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.\க்கு அதிகாரிகளும். கட்சிகாரர்களும் மரியாதை கொடுப்பார்களோ அந்த அளவுக்கு ரவீந்திரநாத்துக்கும் மரியாதை கொடுத்தனர்.
இதுபற்றி மாவட்ட பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலரிடம் கேட்ட போது...
ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் இப்போது தீடீரென அரசியலில் குதித்து விட்டார். அதுபோல் தற்பொழுது அண்ணன் மாநில அளவில் தலைவராகி விட்டதால் மாவட்டத்தில் சரி வர கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால் தான் தற்போது மகன் ரவீந்திரநாத்தை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்த இருக்கிறார். அதை உண்மையிலேயே நாங்களும் வரவேற்கிறோம். இந்த மாவட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் செயல்பட்டு வருகிறார்.
அவரை ஓரம் கட்ட வேண்டும் என்றால் ரவியை களத்தில் இறக்கினால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் ஓ.பி.எஸ் தனது மகனை இறக்கி இருக்கிறார். அது எங்களுக்கு சந்தோசம். அதோடு இனிமேல் கட்சிகார்களின் குறை, நிறைகளையும் ரவி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள்.
ஆக ஓ.பி.எஸ் வாரிசு மீண்டும் அரசியலில் குதித்திருப்பது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.