டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்தார். இது குறித்து தனது அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், ‘’யாரையும் பிடித்து வைக்க முடியாது. எங்கிருந்தாலும் வாழ்க’’என்று செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து கூறிவிட்டு,
’’ சொந்த பிரச்சனைக்காக ஒதுங்கி இருப்பதாக கூறிய செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றுவிட்டார். செந்தில்பாலாஜி அமமுகவை விட்டு சென்றதில் வருத்தமில்லை. விரோதிகளான திமுகவிற்கு சென்றதுதான் வருத்தம். அதற்கு பதில் துரோகிகளான ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு சென்றால் கூட வருத்தப்படமாட்டேன். அங்கேயும் தலைவர் படத்தையும் அம்மா படத்தையும்தான் வைத்திருக்கிறார்கள். அதனால் செந்தில்பாலாஜி அதிமுகவிற்கு சென்றால் அம்மா, தலைவர் படங்களை சட்டையில் வைத்துக்கொள்ளலாம். திமுகவிற்கு சென்றால் வைத்துக்கொள்ள முடியுமா? அதற்காகத்தான் சொன்னேன். துரோகிகளுடன் கூட சென்றிருக்கலாம். விரோதிகளுடன் சென்றுவிட்டார். அதுதான் வருத்தம்.
திமுக எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்திலேயே ஊறியுள்ளது. எங்களது கட்சியில் இருந்து ஒருவரை இழுத்த திமுக அதற்கு ஒரு விழா நடத்துகிறது. திமுக எங்களை பார்த்து பயப்படுகிறது. திருவாரூர் தேர்தலில் ஒரு அடி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்’’என்று தெரிவித்தார்.