சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆசிரியர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர்களைச் சந்தித்தார். இதன் பின் டிடிவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் கொடுத்த ஆட்சி அதிகாரம் 5 ஆண்டுதான். ஆட்சியில் இருந்து அதன் பின் மூட்டையைக் கட்டிச் சென்று விடலாம் என நினைக்கின்றனர். அதன் பின் அவர்கள் தமிழகத்தில் தானே இருக்க வேண்டும். விசித்திரமாக வேதனையாக இருக்கிறது.
எதிர்கட்சிட்யைச் சேர்ந்தவன் என்பதாக ஆளும் கட்சியை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழக மக்கள் கொடுத்த ஆட்சிப் பொறுப்பில் இதைக் கூட செய்யாமல் திராவிட மாடல் என சொல்லிக் கொண்டு இருந்தால் மக்கள் உங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கிறேன்.
இங்கு நான் அரசியல் செய்ய வரவில்லை. அமைச்சர்கள் அளிக்கும் பேட்டிகள் போன்றவற்றை பார்த்துக்கொண்டுதான் உள்ளேன். ஆசிரியர்கள் கேட்பது சம வேலைக்கு சம ஊதியம். இதைக் கூட அரசு செய்யவில்லை என்றால் நான் மட்டுமல்ல அனைத்து மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மக்கள் இங்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கடலில் பேனா வைக்க 80 கோடி நிதி எங்கு இருந்து வருகிறது” எனக் கூறினார்.