கடந்த 13.10.2019 அன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விக்கிரவாண்டிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கையை தமிழக தலைமை அதிகாரி சத்யா பிரதா சாஹு கேட்டிருக்கிறார். சீமான் என்ன பேசினார், எங்கு பேசினார், வீடியோ ஆதாரம் போன்றவை தொடர்பான விரிவான அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீமான் கூறிய கருத்துக்கு அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,சீமான் குறித்து பேசி தமது தரத்தை தாமே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் அண்மைக்காலமாக தனிநபர்களை தாக்கி பேசுவதாக கூறினார். மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து பற்றி குறிப்பிட்ட துரைமுருகன், பொதுவாக தலைவர்கள் இறந்த பிறகு அவர்களை பற்றி அவதூறாக யாரும் பேசமாட்டார்கள் என்றும், அப்படி பேசுபவர்கள் தமிழக அரசியலில் இருப்பது வெட்கக் கேடு என்றும் கூறினார். இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை குறித்து பேசியதை சீமான் திரும்பப் பெற்றுக்கொண்டால் அவருக்கு நல்லது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.