Skip to main content

“தமிழ்நாடு அரசு அறிவித்த பயணம் யாருக்கும் போட்டியல்ல...” - அமைச்சர் சேகர்பாபு

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

"The trip announced by the Tamil Nadu government is not a match for anyone" Minister Shekharbabu

 

தமிழக அரசு அறிவித்த காசி யாத்திரை காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியல்ல என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

 

தமிழக அரசு சார்பில் கடந்த 22 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு முதற்கட்டமாக 66 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை வரவேற்றார். 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 27வது அறிவிப்பாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு செல்கின்ற புனித யாத்திரை பயணத்தை அறிவித்திருந்தோம். கடந்த 22 ஆம் தேதி 66 நபர்களுடன் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. பயணம் முடிந்து சென்னை திரும்பியவர்களை நானும் துறையின் ஆணையரும் வரவேற்று வழியனுப்பி வைத்தோம். இந்த பயணத்திற்காக செலவான 50 லட்சத்தை தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 

 

2022 - 2023 ஆம் ஆண்டுக்கான 200 நபர்களுக்கு காசி புனித யாத்திரை பயண திட்டத்தை அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக 66 பேர் சென்று வந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக அடுத்த மாதம் ஒன்றாம் தேதியும் அதேபோல் மார்ச் 8 ஆம் தேதியும் இந்த பயண திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. மூன்று பிரிவுகளாக பிரித்து காசிக்கு அழைத்து செல்கிறோம். உடன் மருத்துவ குழுவினரையும் அனுப்புகிறோம். 

 

60 வயதிற்கு மேற்பட்டோருக்கான இந்த முதற்கட்ட பயணத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள். இப்பயணம் யாருக்கும் இது போட்டி அல்ல. இதைப் பொறுத்தளவில் கடந்தாண்டு மானிய கோரிக்கையிலேயே நாங்கள் அறிவித்துவிட்டோம். அதன்பிறகுதான் இந்த காசி சங்கமம் எல்லாம் உருவானது. ஆகவே, போட்டி என்று எடுத்துக் கொண்டால் தமிழக அரசு அறிவித்த திட்டத்திற்கு தான் காசி தமிழ் சங்கம் போட்டி என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்