பாஜக தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துகொண்டே உள்ளது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஜார்கண்ட் என பல மாநிலங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆளுநர் தனியாக அரசு நடத்தி வருகிறார்; அங்குள்ள மாநில அரசுகளுக்கு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார்; மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து இட ஆளுநர் தாமதம் செய்கிறார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அரசுகள் தொடர்ந்து சொல்லி வருகிறது.
இந்நிலையில் சில மாநிலங்களில் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா, மணிப்பூர் ஆளுநராகவும், இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் பீகார் ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநர் சவுகான் மேகாலயா ஆளுநராகவும் மாற்றப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், லடாக் யூனியன் துணைநிலை ஆளுநராக பி.டி.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவராகப் பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்தவர். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதும், ராதாகிருஷ்ணன் தற்போது அகில இந்திய கயிறு வாரிய தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.