
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.