இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், 18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் அந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிடலாமா? என்ற கேள்விக்கு, 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. போட்டியிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றார்.