
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே சமயம் பா.ஜ.க.வின் தற்போதைய மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றப்படுவார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு வசதியாகத் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக இன்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில்ல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சினிவாசன், கரு. நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை (11.04.2025) பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாகஅக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டிருந்த அறிவிப்பில், “மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை (11.04.2025 - வெள்ளிக்கிழமை) மதியம் 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் எப்-ஐ (F) பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மாநில தலைவராக போட்டியிடும் வேட்பாளர் கட்சியில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் தற்போதைய மாநில தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துளள்ளனர்.

எனவே தற்போதைய தமிழக பாஜக தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாநிலத் தலைவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.