நாடாளுமன்றத்தில் லோக் சபாவின் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. இவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபகாலமாக பாஜகவிற்கும் சௌத்ரிக்கும் ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைமைக்குத் தகவல் கிடைத்துவருகிறதாம்.
இந்த நிலையில், ஜூலை 15க்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. பாஜகவிடம் மறைமுகமாக நட்பு பாராட்டும் சௌத்ரியை வைத்துக்கொண்டு பார்லிமெண்டில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எப்படி செயல்படுவது என்கிற கேள்விகளை இளம் எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் வெளிப்படுத்திவருகிறார்கள்.
இந்தக் கருத்து வேறுபாடுகளை அறிந்த சோனியா காந்தி, இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களைத் தொடர்புகொண்டு விவாதித்திருக்கிறார். மூத்த தலைவர்களோ, ‘நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்க்க மம்தாவின் ஆதரவும் காங்கிரஸுக்குத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் சௌத்ரி மீது வருகிற புகார்கள் கசப்பானவையாகத்தான் இருக்கின்றன. அதனால், லோக் சபாவின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கலாம்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.
கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, காங்கிரசுக்கு முழு நேர தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க உறுதி காட்டுகிறார். ஆனால், ராகுல் காந்திதான் அதனை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில், லோக் சபாவின் காங்கிரஸ் தலைவராக ராகுலை நியமித்தால் அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்று சோனியா நினைப்பதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் எதிரொலிக்கிறது.