மதுரை மாவட்டம், முனிச்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைப் பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன், மதுரை எம்.பி. வெங்கடேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இந்தியக் கூட்டாட்சி மிகப்பெரிய தாக்குதலில் இருக்கிறது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை, அனைவருக்கும் சம உரிமை என்பதே கூட்டாட்சித் தத்துவம் ஆகும். ஆனால், இரட்டை என்ஜின் என்று சொல்லக்கூடிய மோடி ஆட்சியில் இரு சமூகங்களை நேருக்கு நேர் நிறுத்திப் பற்றி எரியச்செய்யும் நிகழ்வுகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகாத நாட்களே இல்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்ற கொள்கையை நம் மீது திணிக்க முயற்சி செய்து வருகின்றனர். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. அத்தகைய உணர்வின்றி மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.
ஆளுநர் என்ற பெயரில் பா.ஜ.க.வின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துகின்றனர். கல்வி, கூட்டுறவு என மாநில பொதுப்பட்டியல்களில் உள்ள துறைகளைக் கைப்பற்ற தன்னிச்சையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள் மீது அப்பட்டமான நிதி அதிகார மீறல்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.