சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறை தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், பொது வாழ்விலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபகாலமாக தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதேவேளையில் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. அதில், பொதுச்செயலராக சசிகலா தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கே.லெட்சுமிபதி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதில், ‘துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே’ என்ற வாசகங்களுடன் மதுரை முழுவதும் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது மீண்டும் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.