மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை முகநூலில் விமர்சித்த நபரை, சிவசேனா கட்சியினர் மொட்டையடித்து துன்புறுத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாத டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, டிசம்பர் 15ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இவ்வாறு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துவதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்திருந்தார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த மும்பையை சேர்ந்த ஹிராமை திவாரி என்பவர், தனது முகநூல் பக்கத்தில் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்திருந்தார். முகநூல் பக்கத்தில் இந்த பதிவைப் பார்த்து கடும் கோபம் அடைந்த சிவசேனா கட்சியினர், ஹிராமை திவாரி வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதுடன், மொட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.