தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என புதிய நீதிக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021- ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட புதிய நீதிக்கட்சி முடிவு செய்தது.
2000- ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தொடர்ந்து இருந்து வரும் நிலையில், 2014- ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவியது. 2019- ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிட்டு, வெறும் 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவியது. இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து மேற்கண்ட கூட்டணியில் புதிய நீதிக்கட்சி கூட்டணியில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறது.
மத்தியில் நல்லாட்சி புரிந்து வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாட்சியை ஆதரித்தும் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடியாரின் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தும் களமிறங்கி தொடர்ந்து பணியாற்றி புதிய நீதிக்கட்சி விரும்பி முடிவுஎடுத்தது.
கடந்த இருபத்தொன்று ஆண்டுகால அரசியல் அனுபவம் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆற்றிய பங்கு இவைகளை மனதில் நிறுத்தி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், தோழர்கள் மற்றும் அனைத்து வேளாளர், முதலியார், அகமுடையார், செங்குந்தர், பிள்ளைமார் சேனைத் தலைவர் என்று பல பட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மரபினர்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு, தேர்தல் காலத்தில் முக்கியப் பங்காற்றி வரும் அ.இ.அ.தி.மு.க. அணியில் சரியான பிரதிநிதித்துவம் தர வேண்டுகோள் வைத்து முதலில் 11 தொகுதிகள் முன்வைத்து அதில், 5 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்பு 9 தொகுதிகள் முன்வைத்து அதில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டது. அதில், கேட்கப்பட்ட தொகுதிகள் ஏதும் ஒதுக்கித்தரப்படவில்லை. கேட்கப்பட்ட எண்ணிக்கையிலும் தொகுதிகள் ஒதுக்கித்தரப்படவில்லை.
எனவே, இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை. தொடர் நடவடிக்கை குறித்து விரைந்து நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.