தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு பல தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இதற்கு சட்ட பாதுகாப்பு தரும் வகையில் சட்ட மசோதாவை நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் வேலுமணியின் யோசனை இருப்பதாக பிற அமைச்சர்கள் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன. குறிப்பாக, டெல்டா மாவட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தினகரன் கோஷ்டிகளும், விவசாய அமைப்புகளும் அரசுக்கு எதிராக அரசியல் செய்து வரும் சூழலில், பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் அத்தனை அரசியலும் அடிப்பட்டுப் போகும் என வேலுமணி சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்டு அதனை அப்படியே அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.
எடப்பாடியின் அந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று நாடகம் என கூறியுள்ள திமுக, ‘’ இப்படிப்பட்ட அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க முடியும். எடப்பாடி அறிவித்தது எப்படி ? மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றீர்களா ? ’’ என்பது உள்ளிட்ட பல்வேறு நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என பதிலளித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த நிலையில் டெல்லிக்கு தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் பறந்திருக்கிறார்.