சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. சேகர் பாபுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டி வருகிறது சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்.
துறைமுகம் பகுதியில் மாவட்ட காங்கிரஸின் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவராஜசேகரன். அந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு வித்தியாசமாக இருந்தது.
’’எந்திரன் படத்தில், தான் உருவாக்கிய ரோபோவுடன் தனது வீட்டுக்குச் செல்வார் ரஜினி. அப்போது ரோபோவைப் பார்த்த அவரது பெற்றோர்கள், என்ன இது? என விசாரிப்பார்கள். தான் உருவாக்கிய ரோபோவின் ஆற்றல் பற்றி விவரிப்பார் ரஜினி. அதைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்த ரஜினியின் அம்மா, இதற்கு ஒரு பெயர் வைக்கலாமே என யோசனை சொல்வார்கள். அதனை அடுத்து, சிட்டிபாபு எனப் பெயர் சூட்டுவார்கள். அதனைச் சுருக்கி சிட்டி என அழைப்பார்கள்.
சிட்டி என்கிற அந்த எந்திர மனிதன் (ரோபோ) எல்லா வேலைகளையும் செய்வார். கொஞ்சம் கூட ஓய்வே எடுக்காமல் சுழன்று கொண்டே இருப்பார். அந்த சிட்டிபாபு போன்றவர் தி.மு.க. வேட்பாளர் சேகர்பாபு. இருவருக்கும் வேறுபாடுகளே கிடையாது. தி.மு.க.வுக்கு கிடைத்த எந்திர மனிதர்தான் சேகர்பாபு‘’ என்று சொல்ல, காங்கிரஸ் செயல் வீரர்கள் உற்சாகமானார்கள். இதைச் சொல்லியே தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். காங்கிரஸின் ஆத்மார்த்தமான தேர்தல் பணிகள் துறைமுகத்தில் களைக்கட்டுகிறது.