ஆயத்த ஆடைகளின் தலைநகராக இருக்கும் திருப்பூரில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்களின் வாழ்வில் இருளைக் கொடுத்தது கரோனா வைரஸ். ஊரடங்கு, தொழில் நிறுத்தம் ஒட்டு மொத்த வாழ்வையே முடக்கி போட்டுவிட்டது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் உள்ளார்கள். 45 நாட்களைக் கடந்தும் இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியவில்லை. நிம்மதியாக இருக்க இடமோ மூன்று வேளை உணவுக்கோ எந்த உத்ரவாதமோ இல்லை. குடும்பம் குடும்பமாக வறுமையும் பசி என்ற நோயும் இவர்களை வாட்டி வதைக்கிறது.
இந்த நிலையில் ரயில் போக்குவரத்து மூலம் எங்களை எங்கள் தாய் மண்னுக்கு அனுப்புங்கள் என வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டனர். பதிலுக்குத் தமிழக காவல் துறை நீங்கள் வன்முறையாளர்கள் என அந்த அப்பாவி தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த தொடங்கி விட்டது.
இது சம்பந்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற எம்.பி. திருப்பூர் சுப்பராயன் மத்திய மாநில அரசுகளைக் காட்டமாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்,
"திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பல இடங்களில் தடியடி...
எங்களை ஊருக்குப் போக விடுங்கள் அல்லது இருக்க இடமும் மூன்று வேளை உணவும் கொடுங்கள் என்று தானே அவர்கள் கேட்கிறார்கள். .
இதைத் தரமுடியாத மோடியும், எடப்பாடியும் தடியடி நடத்துவது என்ன நியாயம்?
கார்ப்பரேட்டுகளின் கஜானாக்களின் மேல் கண்களைத் திருப்பாமல், வயிறு ஒட்டி போனவர்களையே வழிப்பறி செய்கிறீர்களே...!
வெட்க உணர்வே இல்லையா...?"
எனக் காட்டமாக கூறியிருக்கிறார்.