முன்னாள் மத்திய அமைச்சர் தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முதல் முறையாக எப்போது கைது செய்யப்பட்டார் தெரியுமா? என்ற கேள்வி தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். 9 முறை இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்தவரும், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியப் பதவிகளை வகித்தவருமான சிதம்பரம் கைது இந்திய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
ப.சிதம்பரம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு சென்னை மறைமலை நகர் ரயில் நிலையத்துக்கு காமராஜரின் பெயரை வைக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது திமுக அரசால் கைது செய்யப்பட்டார். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் திமுக அரசு கைதுசெய்து 15 மணிநேரம் கழித்து விடுதலை செய்தது.அதன் பின் 30 ஆண்டுகள் கழித்து இப்போது இரண்டாவது முறையாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.