Skip to main content

திருநாவுக்கரசர் - ரஜினி சந்திப்பு அரசியல் திருப்பம்தான்: நாராயணன் பேட்டி

Published on 06/02/2019 | Edited on 07/02/2019


 

modi



இடைக்கால பட்ஜெட், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு நக்கீரன் இணையதளத்தற்கு பதில் அளித்துள்ளார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 
 

காங்கிரஸ் வாக்குறுதிகள் பட்ஜெட் திட்டங்களாக பாஜக அரசு அறிவித்துள்ளதாக பேசப்படுகிறதே?
 

பாஜகவை பொறுத்தவரை கடந்த நான்கு வருடங்களாக மிக தொய்ந்து போயிருந்த பொருளாதாரத்தை சீர்திருத்தி, கட்டமைப்புகளை பெருக்கி பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. சுதந்திர வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. இந்த அரசுக்கு வருமானவரி செலுத்துவோர் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். சென்ற ஆட்சி இருந்தபோது இருந்த வெளிநாட்டு கடன் தற்போது கிடையாது. சென்ற ஆட்சியில் கொடுக்கப்பட்ட வட்டி இப்போது கிடையாது. இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த ஆட்சிக்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு பரிகாரமாக இந்த அறிவிப்புகள் நடைபெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித திட்டமும் கிடையாது. 
 

தேர்தலுக்கான பட்ஜெட் என்று அனைவரும் விமர்சிக்கிறார்களே?

 

தேர்தலுக்கான பட்ஜெட் என்று கூறுபவர்கள் இதே பட்ஜெட்டில் வேறு எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லாமல் இருந்திருந்தால் இது ஒரு உப்புசப்பு இல்லாத பட்ஜெட் என்று வழக்கமான உப்புசப்பில்லாத வார்த்தைகளை சொல்லியிருப்பார்கள். இடைக்கால பட்ஜெட் என்றால் என்னவென்று யாராவது சொல்ல முடியுமா? எங்கேயுமே இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புகள் கொடுக்கக்கூடாது என்று கிடையாது. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற இடைக்கால பட்ஜெட்டில் இதுபோல அறிவிப்புகள் வெளிவந்துள்ளதை மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
 

பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?
 

இன்றைய தினத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியே 15 லட்சத்து 85 ஐந்தாயிரத்து 443. இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 27.34 விழுக்காடு. அதாவது 38 கோடி. 4 கோடி பேர் கல்லூரி செல்லும் மாணவர்கள். இவையெல்லாவற்றையும் கழித்தால் மீதமிருப்பது 96 கோடி. இதில் இந்தியாவின் மக்கள் தொகையில் பெண்கள் மக்கள் தொகை 66 கோடி. இதில் வேலைக்கு செல்லாத பெண்கள் எண்ணிக்கை 48 கோடி. அதுதவிர 7 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். எஞ்சியுள்ளவர்களை கணக்கெடுத்து பார்த்தால் வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது என்பது புலப்படும். சொந்த தொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் 10 கோடி பேர் இருக்கிறார்கள். இந்த கணக்கின்படி 55 கோடி வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இருக்கிறது. எவ்வளவு பேருக்கு வேலை இருக்க வேண்டுமோ அதைவிட அதிக அளவிலேயே வேலை வாய்ப்பு இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்பது எதிர்க்கட்சிகளால் பின்னப்பட்ட ஒரு சூழ்ச்சி வலையாகும். 
 

''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய கணக்கில் குறைந்தபட்ச வருமானம் செலுத்தப்படும்'' என்று ராகுல்காந்தி கூறியதற்கு, ப.சிதம்பரம் மற்ற நாடுகளைப்போல முறைப்படுத்தப்பட்ட ஊழியர்கள் 100 சதவீதம் என்றால், இங்கே அதுபோன்று கிடையாது. முறைசாரா தொழிலார்கள் எந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதே தெரியாது என்கிறபோது, வேலைவாய்ப்பின்மை என்பதை எப்படி இவர்கள் கணக்கில் எடுக்கிறார்கள்.

 

narayanan


 

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்களே?
 

எம். எஸ். சுவாமிநாதன் அறிக்கையில் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே அறிக்கையில் பயிர் காப்பீடு மிக மிக அவசியம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 வருடங்களில் இதுவரை இல்லாத வகையில் விவசாய பயிர் காப்பீடு பசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலமாக 13 ஆயிரம் கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கியிருக்கிறது. விவசாயிகள் மத்தியில் காப்பீடு என்பதை 1500 கோடி என்று இருந்ததை 13 ஆயிரம் கோடிக்கு உயர்த்தியிருக்கிறது. இது விவசாயிகளின் பயிர் இழப்புகளின்போது, காப்பதற்காக இந்த அரசு எடுத்துள்ளது முயற்சியை காட்டுகிறது.  மேலும் விவசாய கடன் தள்ளுபடி என்ற கோரிக்கை எழுந்தப்படி உள்ளது. எந்த ஒரு பொதுத்துறை வங்கிகளிலும் கடன் வாங்கியிருந்தாலும் அந்த விவசாயி, காப்பீடு செய்து கொள்வது என்பது கட்டாயம். காப்பீட்டுத் தொகையை கழித்துத்தான் கடன் கொடுப்பார்கள். இந்த மாதிரியான நிலையில் பொதுத்துறை வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது எப்படி சாத்தியமாகும். ஏனென்றால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் அனைத்துமே காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவை பொறுத்தவரை கடந்த 4 வருடங்களில் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய பிரீயம் தொகையை எந்தவித நிலுவையும் இல்லாமல் செலுத்தியிருக்கிறது.
 

உத்திரப்பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி என்று பாஜக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றதே? கடன் ரத்து என்று அந்த மாநில அரசு அறிவித்ததே?
 

அங்கே பயிர் காப்பீடு பற்றி முழு அளவில் விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு இல்லை. கடன் தள்ளுபடி என்பதை செய்ய வேண்டியிருந்தது. இன்றைக்கு நாம் அங்கு பயிர் காப்பீடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

 

rahul



விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 17 கொடுப்பது என்பது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் இல்லையா என்று ராகுல் கேட்கிறாரே?
 

விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் மூன்று தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அது ஒரு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்கு கீழே செலவு செய்பவர்கள் மட்டும்தான் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்று சொன்ன காங்கிரஸ் அரசு இதுபற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் விடுகிறது. 
 

சமீபத்தில் மோடி மதுரைக்கு வந்தபோது, கோபேக் மோடி டிவிட்டரில் உலக அளவில் முதலிடம் பிடித்தது. தமிழ்நாட்டில் மோடிக்கான எதிரான அலை அதிகமாகிவிட்டதா?
 

இதனை சமூக வலைதளங்களில் சில கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இவற்றையெல்லாம் நாங்கள் பெரிதுப்படுத்தப்போவதில்லை. கடந்த நான்கரை வருட பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். எந்த அரசாங்கத்திலும் இல்லாத வகையில் மக்களுடைய வீடுகளுக்கே பல திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது சுகாதாரத்திட்டம். இந்த திட்டம் நேரடியாக மக்களின் வீடுகளுக்கு சென்று 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்வதற்கான அத்தாட்சியை வழங்கியிருக்கிறது. அதேபோல் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இதுவரை பல லட்சம் பயனாளிகள் தமிழகத்தில் பயன் அடைந்திருக்கிறார்கள். இதுபோன்று மக்கள் பலன் அடைந்த திட்டங்களை மறைப்பதற்காகத்தான் கோபேக் மோடி என்று சொல்லுகிறார்கள். ஒருவேளை கோபேக் மோடி என்றால் மீண்டும் டெல்லிக்கே செல்லுங்கள் என்று சொல்லுகிறார்களோ என்றுகூட தோன்றுகிறது.  
 

மோடி டீ விற்றதை நான் பார்த்ததே இல்லை. இது மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மோடி சொல்லியிருக்கிறார் என்று விஸ்வ ஹிந்து பரிசத் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியிருக்கிறாரே?
 

அப்படியிருந்திருந்தால் கடந்த ஐந்து வருடமாக இதனை ஏன் கேட்கவில்லை என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் மோடியிடம் எதனையாவது எதிர்பார்த்து அந்த சலுகைகள் கிடைக்காதபோய்விட்ட காரணத்தினால் புலம்புகிறார்கள்.

 

thirunavukkarasar - rajinigath



பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?
 

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்த மூன்று கட்சிகளையும் முறியடிக்க ஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. விரைவில் கூட்டணி உருவாகும்.
 

பாஜக அதிமுக கூட்டணி உறுதி என்று அனைத்து தரப்பிலும் பேசப்படுகிறதே?
 

யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை யாருடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறோம். 
 

எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று சொல்வதில் என்ன தயக்கம்?
 

கூட்டணி தொடர்பாக யாருடன் பேசுகிறோம். என்ன பேசுகிறோம் என்பதை தற்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி உறுதியான பிறகு வெளிப்படுத்துவோம். 
 

எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்தவற்கு முன்பே திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என்று அந்தக் கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள். பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். நீங்கள் மட்டும்...
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவாகிவிட்டது என்று சொல்லுகின்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும். இன்று கூட திருநாவுக்கரர் - ரஜினி சந்திப்பு நடந்துள்ளது. மேலும் திருமாவளவன் ரஜினிகாந்த் மற்றும் திருநாவுக்கரசரை சந்தித்துள்ளார். இது ஒரு அரசியல் திருப்பம்தான். தேர்தல் தேதி வெளியாகாத நிலையில் கூட்டணி பற்றி சொல்ல வேண்டியதில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.