
அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லை என்று பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியது இலைக்கட்சித் தொண்டர்களின் கண்களைச் சிவக்க வைத்திருக்கிறது. கொந்தளிப்பின் உச்சியிலிருக்கிறார்கள்.
அவருக்குப் பதிலடியாய் நெல்லை தொகுதியின் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான சுதா. பரமசிவன் நெத்தியடியாய் வார்த்தைகளை சக தொண்டர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான சுதா பரமசிவன் ‘தமிழகத்தில் குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி, கோவை பகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி.க்கு தொண்டர்கள் உள்ளனர். அதைவிடுத்து பிற இடங்கள் மற்றும் குறிப்பாக நெல்லை சட்ட மன்றத்தில் விரல் நீட்டுமளவுக்குத் தாமரைத் தொண்டர்களில்லை. நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற உறுப்பினராக ஜெயிப்பதற்குக் காரணமே ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டர்களும் தாமரைக் கொடியை உயர்த்தி உழைத்ததால் தான் எம்.எல்.ஏ.வானார். பிறர் தோளின் மூலம் வெற்றி கண்டவர் எங்களைப் பார்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இல்லை. அவர்கள் சட்டமன்றத்தில் வாய்திறக்கவில்லை.
அவர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாகப் பேசிவருவது அவர்களின் சுயநலம். சிறைச்சாலைக்குச் செல்லாமலிருப்பதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள் என்று எங்களைப் பார்த்து தரக்குறைவாகப் பேசிவருகிறார். 2001ல் அ.தி.மு.க.வில் அம்மாவின் தயவால் அமைச்சராகி தொழில்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எங்களைப் பார்த்து விரல் நீட்டும் உங்களைப் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறோம். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு ஜெயித்து உங்களின் ஆண்மையை நிரூபித்துக் காட்டுங்கள். முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. அ.தி.மு.க. கூட்டு வைத்ததால் தான் இவ்வளவு படுதோல்வியை அடைந்துள்ளோம். அதற்கு காரணமே பி.ஜே.பி. கட்சிதான்.’ என்று சொன்ன சுதா பரமசிவனின் படபடப்பு அடங்க நேரமானது.