இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் கிண்டியிலுள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,
ராகுல்காந்தி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல்காந்திதான் தலைவராக நீடிக்க வேண்டும். இதுதான் நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸின் கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் விருப்பம்.
ஒரு தேர்தலில் ஏற்படும் வெற்றியோ, தோல்வியோ ஒரு தலைவரின் செல்வாக்கையோ, எதிர்காலத்தையோ தீர்மானித்துவிடாது. இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு எப்படி ராகுல்காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியும்? நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாற்றங்கள் செய்ய வேண்டும் என ராகுல்காந்தி விரும்புகிறார். அதற்கான அதிகாரத்தை செயற்குழு அவருக்கு கொடுத்திருக்கிறது.
அவருக்கு வயதிருக்கிறது. மன்மோகன் சிங் இருக்கும்போது அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பிரதமராக வந்திருக்கலாம். மன்மோகன்சிங்கும் பிரதமர் பதவியை தருவதற்கு தயாராக இருந்தார். பிரதமர் ஆவதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என அவர் நினைத்திருந்தால் அவர் எப்போதோ பிரதமராகியிருப்பார்.
இந்த ஐந்தாண்டுகள் வேகமாக சென்றுவிடும். அடுத்த பிரதமர் நிச்சயமாக ராகுல்காந்திதான். நாங்கள் அவருக்கு பக்கபலமாக இருப்போம். அவருக்காகவும், கட்சியை பலப்படுத்தவும் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.