பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வெறுப்பும் பிரிவினைவாதமும் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. அண்டை மாநிலங்கள் பலவற்றில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். சாலையில் பேரணியாக நடந்து வந்த பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளும் நடைபெற்றது.
போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாகவும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்திய நாட்டை துண்டாடி வருகிறார்கள் எனவும் இந்த வெறுப்புணர்வு காரணமாக பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை அதிகரிப்பதாகவும்” கூறினார்.
மத்திய அரசின் கொள்கைகள் இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலனளிப்பதாகவும் மோடி அரசால் ஏழைகள் விவசாயிகள் சிறு குறு வியாபாரிகள் ஏதாவது பலன்களை பெற்றுள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வருவதை மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.