சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகள் கரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்தப் பரவலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களால் ஊரடங்கு வாபஸ் பெற்று இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது.
இப்போதுகூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வது ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதுமட்டுமே நோய்ப் பரவல் தடுத்துவிட முடியாது. எனவே ஒருங்கிணைந்த திட்டம் என்ற முறையில் தமிழக அரசு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நான்கு மாவட்டங்களில் பரவலாகச் சோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய் அடையாளம் கண்டவர்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அனைவரையும் பரிசோதனை செய்து யாருக்கு நோய்த்தொற்று உள்ளதோ அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜூலை மாதம் நோய்த் தொற்று மிக உச்சத்தை எட்டும், என்ற காலகட்டத்தில் ஒரு லட்சம் மேற்பட்ட படுக்கைகளை அரசு தயார் செய்து வைக்க வேண்டும்.
அதேபோல் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை, இந்த நேரத்தில் கூட தேவையான அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கும் முயற்சி என்பது தவறானது, இதனால் அரசின் தேவையை ஈடு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல பெருத்த ஊழல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில், ஜென்டில்மேன் ஏஜென்சி என்று நிறுவனம் மூலம் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமித்து அதன் மூலம் பணி அமர்ந்திருக்கிறார்கள். அதில் மிகப்பெரிய ஊழல் நடக்க வழி வகுத்துள்ளதுள்ளனர். இதனால் அரசின் தேவைகள் பூர்த்தி அடையாது.
இன்னும் சுமுகமான நிலை திரும்பாத நிலையில், மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ 5,000 நிவாரணத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொதுமக்களின் கையில் பணம் இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்குவார்கள், வேலையையும், வருமானத்தையும் இழுந்து, பட்டினியாக இருக்கும் பொழுது, மேலும் நெருக்கடிகள் அதிகமாகும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் ரூ12,500 நிவாரணம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதுபோல் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட கொடுக்காமல் உள்ளது. ஜி.எஸ்.டி. பங்குத்தொகை நமக்குக் கிடைக்க வேண்டியதை வழங்கவில்லை. அதை வழங்க மறுக்கிறார்கள். மாநில அரசு கடன் வாங்க அனுமதி கேட்டால் கூட நாங்கள் சொல்கின்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால்தான் கடன் வழங்க அனுமதி அளிப்போம் என மத்திய அரசு கூறுகிறது.
மாநில அரசின் கையைக் கட்டி வைத்திருக்கிற நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளது. இதனால் மாநிலங்களில் நிதி நெருக்கடி அதிகமாக ஏற்பட்டுள்ளது. எனவே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் முதல் குமரி வரை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு அரசு செவிசாய்க்க வில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் செல்வோம். சென்னையில் கரோனா நோய்த் தாக்குதலில சாவு எண்ணிக்கையைச் சொல்ல தயங்குகிறது. ஏற்கனவே 240 பேர் இறந்தவர்களை. இப்போதுதான் வெளியிடுகிறது. அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். என்ன உண்மையோ மக்களுக்கு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அத்தனையும் அரசாங்கம் கையகப்படுத்தி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் காப்பீட்டுத் தொகை மூலமாகவோ, அரசு நிதி மூலமாகவோ நேரடியாக வழங்க வேண்டும், இதைச் செயல்படுத்தினால் தான் சாவு எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனக் கூறினார்.