மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். திருமாவளவன் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்ததில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கு கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் என பலரும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது பேசு பொருளாகி உள்ளது. மேலும், அந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுசர்ச்சையை ஏற்படுத்த மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனக்கு தெரியவில்லை என்னுடைய அட்மின் போட்டு இருப்பார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது நீண்டகாலமாக நாங்கள் விடுக்கும் கோரிக்கை தான். புதிதாக எதையும் சொல்லவில்லை’ என தெரிவித்துவிட்டு சென்றார்.
இதற்கிடையில், திருமாவளவன் முதன்முதலாக ஊன்றிய கட்சி கொடி அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கிய போது மதுரை மாவட்டம், கே.புதூர் பகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கட்சி கொடியை ஏற்றினார். 20 அடி உயரம் கொண்ட அந்த கட்சிக் கொடி, கடந்த சில வாரங்களுக்கு புதுப்பிக்கப்பட்டு 62 அடியாக கட்சி கொடி மாற்றி அமைக்கப்பட்டது. சாலை ஓரத்தில் நடப்பட்டிருந்த அந்த கட்சிக் கொடி, அனுமதியின்றி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்று வருவாய் துறையினர் கூறி வந்த நிலையில், மதுரை மாவட்ட வி.சி.கவினர், அந்த கட்சி கொடி அகற்றி அங்கிருந்து 10 அடி தூரத்திற்கு நட்டிருந்தார்கள். இந்த நிலையில்,மாநகராட்சி, வருவாய்துறை , போலீசார் ஆகியோர் அனுமதியின்றி கொடி கம்பத்தை நடப்பட்டிருப்பதாகக் கூறி, போலீசார் நேற்று நள்ளிரவில் அந்த கொடி கம்பத்தை அகற்றி சில அடிகள் தள்ளி நட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.கவினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.