சென்னை தலைமைச் செயலகத்தில் திட்டங்கள் வளர்ச்சித் துறையின் உடைய ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பொழுது மைக் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் ஒரு சில வரிகள் சரியாகக் கேட்கவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடச் சொன்னோம்'' என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலைச் செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?. தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதற்குப் பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?. தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழிச் சொல்லும் முதல்வரும், துணை முதல்வரும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?. இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா?.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தைப் பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்’’ எனக் கூறுகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை முதல்வரும், துணை முதல்வரும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.