கர்நாடகத்தைப் போலவே ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும் என யஷ்வந்த் சின்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஜ்பாய் பிரமதராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்கா. இவர் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் பீகார் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட யஷ்வந்த் சின்கா, அரசியல் துறவு மேற்கொள்ளப்போவதாக அறிவித்து பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து யஷ்வந்த் சின்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்சியில் விலகியதை எண்ணி நான் மகிழ்ச்சிகொள்கிறேன். ஒருவேளை அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெறமுடியவில்லை என்றாலும்கூட அந்தக் கட்சி இதைச் செய்யத் தயங்காது. எனது எச்சரிக்கையை கருத்தில் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
I am glad I have left the party which is so brazenly trying to subvert democracy in Karnataka. It will do the same if it fails to get majority in Lok Sabha next year. Pl note my warning.
— Yashwant Sinha (@YashwantSinha) May 16, 2018
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அமைத்து பெரும்பான்மையை அறிவித்த நிலையிலும், 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வுக்கு ஆட்சி அதிகாரத்தை அம்மாநில ஆளுநர் வஜுபாய் வழங்கியதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், யஷ்வந்த் சின்காவின் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.