முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் வென்றதாக மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலை அடுத்து அங்கு நிலவிவந்த பரபரப்பான அரசியல் சூழல் தற்போது தணிந்திருக்கிறது. உள்நோக்கத்துடன் செயல்பட்ட ஆளுநர் வஜூபாய், ஜனநாயகத்தைக் கொன்று ஆட்சியமைத்த எடியூரப்பா, உச்சநீதிமன்றத்தால் குட்டப்பட்ட தற்காலிக சபாநாயகர் போபையா என காங்கிரஸ் முன்வைத்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கயிருந்தது.
மாலை 3.30 மணி முதல் சபையில் பேசிய முதல்வர் எடியூரப்பா, அம்பேத்கரின் 150ஆவது பிறந்த தினத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தன்னை முதல்வர் வேட்பாளராக நியமித்தனர். விவசாயக் கடன்களை ரத்து செய்ததைப் போல ஏழை, எளிய மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களது எம்.எல்.ஏ.க்களையே நம்பவில்லை. அவர்களது குடும்பத்தினருடன் பேசவிடாமல், அவர்களை அடைத்து வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து தனக்கு பெரும்பான்மை இல்லாததை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
Democracy wins. Congratulations Karnataka. Congratulations DeveGowda Ji, Kumaraswamy Ji, Congress and others. Victory of the 'regional' front
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2018
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி ஆட்சியமைக்கிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்கம் மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவிற்கு எனது வாழ்த்துகள். தேவ கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது பிராந்திய முன்னணியின் மகத்தான வெற்றி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.