கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகள் பொதுமக்களிடம் கடன் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ள சூழலில், இந்த மூன்று மாதங்களுக்குக் கடன் மீதான வட்டியை நீக்கவேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்குத் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழிற்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகள் பொதுமக்களிடம் கடன் வசூல் செய்யக்கூடாது என அறிவித்தார். ஆனால், வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த மூன்று மாதத்திற்கான வட்டியையும் சேர்த்து ஜூன் மாத தவணையுடன் மக்கள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நிதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் திட்டம் மக்கள் மீதான சுமையை மேலும் அதிகரிப்பதால், இந்த மூன்று மாதத்திற்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, அதனால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடன் வசூலிப்பதைத் தள்ளிவைப்பது என்பது தற்காலிக தீர்வாகவே உள்ளது. வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கைப்படி, மூன்று மாதங்களுக்கான வட்டியை ஜூன் மாதம் செலுத்த வேண்டும் என்பது, மக்கள் மீதான சுமையைச் சிறிதுகாலம் தள்ளிப்போடுவதற்கான வழியே ஆகும். எனவே மக்களின் சுமையைப் போக்கும் வகையில், இந்த மூன்று மாதங்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்யலாம். மேலும், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் சூழலில், அந்நிறுவனங்களுக்குக் கடன் வரம்பை அதிகரித்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.