சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமா, "உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளா, பேராசிரியர்களா ,உயர்கல்வி நிறுவனங்களா இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் 99 விழுக்காடு பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். இதர பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களாக மாற்றப்பட்டவர்கள் அதில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்கள் . இப்படி சூத்திரர்கள் கல்வியிலும், அதிகாரத்திலும், நிலம் என அனைத்திலும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளை நடத்தியவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர். அதற்கான ஆய்வுகளையும் அதற்கான நூல்களையும் ஆய்ந்து எழுதியவர் தான் புரட்சியாளர் அம்பேத்கர் .இப்படி கற்று உணர்ந்த பிறகு தான் அவர் சொல்கிறார் இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும் ஆரியத்திற்கும் ஏற்பட்ட யுத்தமே இந்திய வரலாறு என்கிறார்.
கோட்பாட்டு யுத்தம் ஆரியம் என்றாலும், பார்ப்பனியம் என்றாலும், இந்துத்துவம் என்றாலும் சனாதனம் என்று தான் பொருள். சனாதனம் என்பதுதான் அவர்களே அவர்கள் கோட்பாட்டுக்கு வைத்திருக்கும் பெயர் சனாதன தர்மம். மனு எழுதிய சட்ட தொகுப்பு தான் மனுஸ்மிருதி. இந்த மனுஸ்மிருதி என்பது சனாதன அடிப்படையில் இந்து சமயத்தை முறைப்படுத்துவதற்கான பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே தொகுக்கப்பட்ட சட்ட நூல். ஆகவே இந்த சனாதனத்தை எதிர்த்துத் தான் அப்பொழுது பௌத்தம் யுத்தம் நடத்தியது. அந்தக் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. மௌரிய பேரரசு காலத்திலே இந்தியா முழுவதும் பௌத்தம் தான் கோலோச்சியது. இந்தியா முழுவதும் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே பௌத்தர்களாகத் தான் இருந்தார்கள் என்பது வரலாறு.
பார்ப்பனியத்திற்கு எதிரானவர்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டார்கள். இப்படி மனிதநேயமும், சமத்துவமும் இல்லாத இந்து மதத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என அறிவித்து பெளத்த மதம் மாறினார் அம்பேத்கர். அப்படி மாறிய போதும் அவர் தேர்வு செய்த இடம் நாகபுரி அல்லது நாக்பூர். அவர் எதற்காக நாக்பூர் தேர்வு செய்தார் என்றால் அங்குதான் நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்கள் நார் என்றால் தமிழர்கள், திராவிடர்கள் என அம்பேத்கர் எடுத்துரைத்தார்.
அவர் பெளத்தம் மதம் மாறும் போது கூட 22 உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் அதில் முதல் உறுதிமொழியே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைக் கடவுளாக வணங்கமாட்டேன். அவர் அடுத்து எடுத்த உறுதிமொழி ராமன், கிருஷ்ணன் இறைவனின் அவதாரம் என நம்பமாட்டேன் என்கிறார். இப்படி 19 உறுதிமொழியாக மனிதநேயம் சமத்துவம் அற்ற முட்டாள்தனமான இந்து மதத்தை விட்டொழித்து பெளத்தம் ஏற்கிறேன் என்றார். இப்படிப்பட்ட மாமனிதரை, புரட்சியாளரை சிலர் அற்ப ஆதாயத்திற்காக புரட்சியாளர் படத்திற்கு பட்டை இட்டு, குங்குமம் வைத்து இழிவுபடுத்துவதை இனியும் விடுதலைச் சிறுத்தைகள் பொறுத்துக்கொள்ளமாட்டோம்” எனத் தெரிவித்தார்.