
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தொடர்ந்து சீமான் ஆஜராக மறுத்த நிலையில் இன்று ஆஜராக போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். சீமான் இன்று இரவு ஆஜராக இருப்பதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதேபோல் பேரிகார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.
வளசரவாக்கம் தேவிகுப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். ஒருவேளை நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய வாகனங்களும் கொண்டுவரப்பட்டது. இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் அவரிடம் 63 கேள்விகளுக்கு பதில் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இரவு 10 மணிக்கு சீமான் ஆஜராகினார்.

ஆஜராகியுள்ள சீமானிடம் கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முன்னதாக சீமான் இன்று கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் 30 நிமிடங்களில் விசாரணை முடிந்து சீமான் வீட்டுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும், மீண்டும் ஒரு முறை சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது.
இன்று நடைபெற்ற விசாரணையில் சீமான் அளித்த பதில்கள் எழுத்து பூர்வமாகவும், வீடியோ கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முழு விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
விசாரணைக்கு பின் வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அதே பழைய கேள்விகளை தான் திரும்ப கேட்டார்கள். புதிய கேள்விகள் எதுவும் இல்லை. அதற்குரிய விளக்கத்தை நான் கொடுத்திருக்கிறேன். எங்கே வீடு இருந்தது, உங்க முகவரி என்ன? எப்பொழுது இருவரும் சந்தித்தீர்கள் போன்ற கேள்விகள் தான் கேட்டார்கள். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கனவே விசாரித்து விட்டார்கள். 15 ஆண்டுகளாக தொல்லையாக இருக்கிறது என நான் தான் இந்த வழக்கை தொடுத்தேன். நீதிபதி மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.
மூன்று மாத காலம் இருக்கும்பொழுது மூன்றே நாளில் விசாரிக்க வேண்டும் என என்ன அவசியம். அவசியமில்லாமல் வீட்டில் சென்று அழைப்பானை ஒட்ட வேண்டிய அவசியமில்லை. என் மீதுள்ள பாசத்தில் வீட்டுக்கு என்னை பாதுகாப்பதற்காக வந்தவர் அவர், ஒன்னும் காவலாளி கிடையாது. அவரை அடித்து இழுத்து அழைத்து சென்றுள்ளனர். எங்கள் வீட்டில் காவலாளி என்றே யாரும் இல்லை அவர் என் மீதுள்ள பாசத்தில் என்னை பாதுகாக்க வந்தவர். காவல்துறைக்கு அரசு தரப்பில் இருந்து வழக்கில் அழுத்தம் இருக்கிறது. இந்த வழக்கெல்லாம் எனக்கு இடையூறு அல்ல தேர்தலுக்கு இரண்டு நாளுக்கு முன்பு சின்னம் கொடுத்தார்கள், எட்டாவது பொட்டியில் சின்னத்தை வைத்தார்கள், கோடிக்கணக்கான காசை கொட்டினார்கள். எங்களை தேடி 36 லட்சம் பேர் வாக்கு செலுத்தி உள்ளார்கள். தனித்து நின்று அங்கீகாரத்தை பெற்றுள்ளோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா என கேள்வி எழுப்ப, 'முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என தெரிவித்தார்.