கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பலாஜி " நடிகர் விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்துதான். 'ரஜினி மலை, அஜித் தலை' என்றார். மேலும் அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல; அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட் என்று தெரிவித்தார்.